Thursday, 26 January 2017

குறள் கற்போம் - தொடர் - 03

திருக்குறளை எளிமையாகக்
கற்போம். - தொடர் - 03
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

இனிய பெருந்தகையீர், வணக்கம்.

திருக்குறளை அனைவரும் எளிதில்
கற்றுக் கொள்ளும் முறையினை
விளக்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள
இத்தொடரின் மூன்றாம் நிலைக்கு நாம்
இப்போது வந்துள்ளோம்.
கடந்த பதிவில் திருக்குறள் வெண்பா
என்னும் பா வகையால் இயற்றப்பட்டது
என்பதையும், அஃது இரண்டடிகளிலான
குறள் வெண்பாவினால் இயற்றப்பட்ட
நூல் எனவும் அறிந்தோம். இக் குறள் வெண்பா
முதலடியில் நான்கு சீர்களையும், இரண்டாம்
அடியில் மூன்று சீர்களையும் கொண்டு,
மொத்தம் ஏழு சீர்களைக் கொண்டு அமைக்கப்
படுவதாகும்.
இனி, சீர், சீர்கள்  என்றால் என்ன பொருள்
என்பது பற்றி அறியவிருக்கின்றோம்.

முதலில், ' அசை' என்பதைப் பற்றி அறிந்தால்தான்
சீர் பற்றிய தெளிவான அறிவைப் பெற முடியும்.

எழுதப்படுவது எழுத்து என்பதைப் போல்,
பாடப்படுவது பாட்டு என்பதைப் போல்,
இசைக்கப் பெறுவது இசை என்பதைப் போல்,
அசைக்கப் பெறுவது அசை எனப்பெறும்.
எழுத்துகளால் அசைத்து இசை கொள்ளுதலால்
அசை எனப் பெயர் பெற்றது.

அசையாவது, குறில், நெடில், உயிர், ஆய்தம், மெய்,
உயிர்மெய், குற்றியலுகரம், குற்றியலிகரம்,
ஐகாரக் குறுக்கம், வல்லினம், மெல்லினம்,
இடையினம், அளபெடை ஆகிய 
உறுப்புகளைக்  கொண்டதாகும்.

குறில் என்றால், குறுகிய ஓசையை உடைய
எழுத்துகளைக் குறிக்கும்.
எ-கா:  க, கி, கு, கெ, கொ   போன்று வரும் ஏனைய
வரிசைகளில் உள்ள எழுத்துகள் அனைத்தையும்
குறிக்கும். இவை  குற்றெழுத்துகள் எனவும்
குறிக்கப்பெறும்.

நெடில் என்றால், நீண்ட ஓசையை உடைய எல்லா
எழுத்துகளையும் குறிக்கும்.
எ-கா:  கா, கீ, கூ,  கே, கை, கோ, கோ,  போன்றுவரும்
ஏனைய வரிசைகளில் உள்ள எழுத்துகள்
அனைத்தையும் குறிக்கும். இவை
நெட்டெழுத்துகள் எனவும் குறிக்கப்பெறும்.

ஆய்தம் என்பது - ' ஃ' - ஐக் குறிக்கும்.
மெய் என்பது  க், ங், ச், ஞ், ட், முதலான பதினெட்டு
மெய்யெழுத்துகளையும், (இவை 'ஒற்றெழுத்துகள்'
என்றும் பின்னர் குறிக்கப்பெறும்).

உயிர்மெய் என்பது, க, கா, கி, ...ங, ஙா, வி,....போன்று
வரும்  தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஏனைய
எழுத்துகள் அனைத்தையும் குறிப்பதாகும்.
இதுபற்றிய ஓர் இலக்கணப் பாடம் முன்பே நடத்தப்
பெற்றுள்ளது.
ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ சேர்ந்து 'அசை'யாகும்.

இனி, அசை என்பது,

1. நேரசை  2.  நிரையசை என இருவகைப்படும்.

1. நேரசை - என்பது...
***********
1) ஒரு குற்றெழுத்து தனித்தும், (எ-கா: )  க, கி, ச, செ, ...
2) ஒரு குற்றெழுத்துடன்  ஓர் ஒற்றெழுத்து அடுத்தும்,
எ-கா:  க+ ல்= கல் ;  வி- ல்= வில், சொ-ல் = சொல்
என்றும் ,

3) ஒரு நெட்டெழுத்து தனித்தும், ( எ-கா:) கா, மா, ...
4) ஒரு நெட்டெழுத்துடன் ஓர் ஒற்றெழுத்து அடுத்தும்,
எ-கா:  கா+ல் = கால் ;  மா+ ன்= மான்; தே+ ன்= தேன்
என்றும்  வரும்.
குறிப்பு:
********
இவை நான்கும்  'நேரசை ' எனப்படும்
என்பதை மட்டும்  நினைவில் கொள்ளவும்.

2) நிரையசை:  - என்பது..
***************

1)  இரு குறில் இணைந்தும், (எ-கா:) திரு , கனி...
2)  இரு குறிலுடன் ஓர் ஒற்று அடுத்து வந்தும்,
    ( எ-கா:). நல+ ம் = நலம் ;  பிற+ ர் = பிறர் - என்றும்,

3) குறில் நெடில் இணைந்தும் , (எ-கா:):
      புறா ;  விழா ; நிலா...

4) குறில் நெடில் ஒற்றடுத்தும், (எ-கா:):
     சிறார் ;  புலால்... 
என்றும் வருவதெல்லாம் ' நிரையசை' எனப்படும்.

இனி, சீர் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

சீர் என்னும் சொல்லுக்கு அழகு, ஒழுங்கு, சிறப்பு,
செல்வம் போன்ற பொருள்கள் உண்டு.

ஒழுங்குபட்டு அமைந்திருப்பது சீர் ;
ஒரு கட்டுக்குள் அமைந்திருப்பது சீர் ;

செய்யுளுக்கு, ( குறள் உட்பட) அழகு
சேர்ப்பது சீர் ;

செய்யுளை ஒழுங்குபடுத்துவதும் சீர்தான்.
சீர் இல்லாமல் செய்யுள் அமையாது!

அதாவது, அணுத்திரள் ( அணுவின் சேர்க்கை)
ஒலியாகும் ;  ஒலியின் வடிவம் எழுத்து ;
எழுத்தால் ஆனது அசை ; அசையால் ஆனதே
சீர்! 

அசை ஒன்றோ, இரண்டோ, மூன்றோ  சேர்ந்து
நிற்பது சீர் ஆகும்.
அவை : ஓரசைச்சீர் ; ஈரசைச்சீர் ; மூவசைச்சீர்
என மூன்று வகைப்படும்.

குறள் வெண்பா என்பது இரண்டடிகள் மட்டும்
கொண்ட செய்யுளேயாகும்.
முதலடியில் நான்கு சீர்கள் கொண்டும்,
இரண்டாவது அடியில் மூன்று சீர்களோடும்
முடிந்துவிடும்.
ஈற்றுச் ( கடைசி - ஏழாவது) சீரைத் தவிர
மற்ற சீர்கள் எதுவும் ஓரசை மட்டும் கொண்டு
அமையாது. இரண்டு அல்லது மூன்று
அசைகள் கொண்ட சீர்களாகவே அமையப்
பெற்றிருக்கும்.
ஈற்றசை மட்டும் ஏதேனும் ஒரு நேரசை அல்லது
நிரையசையில் முடியும்.
அதாவது,
இரண்டு அடிகள் மட்டுமே கொண்டு,
முதலடி நான்கு சீர்களிலும்
இரண்டாவது அடி மூன்று சீர்களிலும் அமையப்
பெற்று,
இரண்டாவது அடியின் இறுதிச் சீர்,
காசு - பிறப்பு- நாள்- மலர் என்னும் வாய்பாடுகளுள்
ஏதாவது ஒன்றனைப் பெற்று முடிதல் வேண்டும்
என்பது குறள் வெண்பாவுக்கான பொது
இலக்கணமாகும்.
இதனையல்லாமல்,
வெண்பா எழுதும் இலக்கண முறையும் உண்டு.
அது தேவைப்படுமாயின் பின்னர் விளக்கப்படும்.
இப்போது போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இந்த இரண்டு  அடிகளை, ஒன்றே முக்கால் அடி
என்று பலரும் கூறுகின்றனர். இது தவறானதாகும்.
அவை இரண்டு அடிகள் என்றே கொள்ளவேண்டும்.
இரண்டாவது அடி, அதாவது இறுதியடி, மூன்று
சீர்களில் அமைந்துள்ளது, அவ்வளவே.

இனி, இறுதிச் சீரானது   காசு, பிறப்பு, நாள், மலர்
என்னும் முறையில் அமைதல் வேண்டும் என்பதன்
பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இதற்குத் துணையாகக், ' குற்றியலுகரம் ' என்னும்
ஓர் இலக்கண உறுப்பைப் பற்றித் தெரிந்து
கொள்வது தேவையாக உள்ளது.
அதைப் பற்றிப் பார்க்கலாம்......

குற்றியலுகரம்....                      - தொடரும்.....04.-

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன். .
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

No comments:

Post a Comment