Thursday, 26 January 2017
குறள் கற்போம் - தொடர் - 07
திருக்குறளை எளிமையாகக்
கற்போம். - தொடர் - 07
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
இனிய பெருந்தகையீர், வணக்கம்.
திருக்குறளை அனைவரும் எளிதில்
கற்றுக் கொள்ளும் முறையினை
விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள
இத்தொடரின் ஏழாம் நிலைக்கு நாம்
இப்போது வந்துள்ளோம்.
முந்தைய பதிவில், குறள்களை ஒருவர் கற்று
அறிவதற்குப் புணர்ச்சி நெறிளைக் கற்றுக்
கொள்வது இன்றியமையாதது என்று பார்த்தோம்.
இவை திருக்குறளில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன
என்பதையும் சில குறட்பாக்களில் கண்டோம்.
புணர்ச்சி நெறியில் மேலும் சிலவற்றை இன்று
அறிந்து கொள்வோம்.
இதுகாறும் :
(1) உயிரீற்றுப் புணர்ச்சி
(2) குற்றியலுகரப் புணர்ச்சி - நெறிகளை அறிந்தோம்.
இனி,
(3) இயல்பாகவும் நெறியாலும் (விதி) நிற்கும்
உயிர் ஈறு :
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼
நெறி: " இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே."
இயல்பாகவோ, இலக்கண நெறிகளாலோ
நிலைமொழி ஈற்றில் நிற்கும் உயிர் எழுத்துகள்
க,ச,த,ப , வருமொழியோடு புணரும்போது,
பெரும்பாலும் அவ் எழுத்துகள் இரட்டித்துப் புணரும்.
எ-கா:
-----------
1) இளமை + பருவம்.
இளமை - இள( மை= ம்+ஐ ) - இங்கு உயிர் ' ஐ'
இயல்பாகவே உள்ளது. இவ்வாறு நிலைமொழியின்
இறுதியில் உயிர் இருந்தால் க,ச,த,ப - மிகும் .
( மிகும் என்றால் மிகுக்கும் அல்லது வலிந்து
ஒலிக்கும் எனப்படும்.
இளமை + பருவம் = இளமைப்பருவம்
=இளமைப்பருவம். [இளமை(+ப்+ப்+)அ+ருவம் ]
'ப்' > இரட்டித்துள்ளது.
2). வண்ணம் + பறவை.
வண்ணம் - வண்ண > மவ்வீற்று ஒழிந்து..
வண்(ண்+அ) - இங்கு மகரம் நீக்கப்பெற்று
நெறியின்படி ' அ' - உயிர் இறுதியில் உள்ளது.
ஆகவே, வண்ணம் + பறவை = வண்ணப் பறவை
ஆகும்.
= வண்ணப்பறவை [ வண்ண(ப்+ப்+)அ+றவை.
'ப' > இரட்டித்துள்ளது.
(4) பல சில - இவற்றின் புணர்ச்சி:
நெறி : " பல சில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற." (நன்.170)
1. பல என்னும் சொல்முன் பல என்னும் சொல்லும்
சில என்னும் சொல்முன் சில என்னும் சொல்லும்
வரும் போது....
(அ) இயல்பாக வரும். : பல+ பல = பலபல
(ஆ) வல்லினம் மிக்குப் புணரும் : பல- பல = பலப்பல.
( இ) நிலைமொழி இறுதியிலுள்ள அகரம் கெட,
எஞ்சி உள்ள லகரம் றகரமாய்த் திரியும்.
: பல+ பல = பற்பல (அகரம் கெட்டுள்ளது:'‘
2. பல சில என்னும் சொற்களின் பின் பிற சொற்கள்
புணரும்போது, நிலைமொழியின் இறுதியில் உள்ள
அகரம் கெட்டும் புணரும், கெடாமலும் புணரும்
அகரம் கெட்டுப் புணர்தல் : பல+ கலை = பல்கலை
சில+ வினை = சில்வினை.
அகரம் கெடாமல் புணர்தல்: பல+ கலை= பலகலை
சில + வளை = சிலவலை.
(5) திசைப் பெயர்:
🔼🔼🔼🔼🔼🔼🔼
1) கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைப்
பெயர்கள்முன் வேறு திசைப்பெயர்களோ, பிற
சொற்களோ வந்து புணரும் போது நிலைமொழியின்
இறுதியில் உள்ள உயிர்மெய்யெழுத்து ' கு' வும் அதன்
அயல் எழுத்தாகிய ககர ஒற்றும் ( க்) நீங்கிப் புணரும்.
எ-கா:
வடக்கு+ மேற்கு = வட(க்கு~நீங்கி)மேற்கு =வடமேற்கு.
2) ஈற்று உயிர்மெய் நீங்கியபின் அடுத்து நிற்கும்
றகரம் னகரமாகவோ, லகரமாகவோ திரியும்.
எ-கா:
(அ) தெற்கு+ மேற்கு = தென்மேற்கு:
[தெற்(கு🚯 நீங்க..) ற்👉ன் ஆனது.(றகரம்👉னகரம்)
(ஆ) மேற்கு+நாடு = மேல்நாடு.
மேற்(கு🚯 நீங்க..), ற்👉 ல் ஆனது. (றகரம்👉லகரம்)
---------------------------------------
குறிப்பு: அடுத்த நெறிக்குப் போகுமுன் இன எழுத்துகள்
↔↔↔ பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சொற்களில் உள்ள எழுத்துளை இணைக்கும்போது
தமிழில், இன்ன எழுத்துக்கு அடுத்து இன்ன எழுத்துதான்
வரவேண்டும் என்னும் ஓர் ஒழுங்கு பற்றிக் கூறுவதே
இனவெழுத்தாகும். ஒரே இடத்திலும், ஒரே போன்ற
முயற்சியாலும் பிறந்த எழுத்துகள் இனவெழுத்துகளாம்.
இனவெழுத்துகள்.
👇👇👇👇👇👇👇
(இன எழுத்துகள்)
வல்லின எழுத்துகளுக்கு
அவற்றை அடுத்துள்ள
மெல்லின எழுத்துகள்
இணை எழுத்துகளாக வரும்.
எ-கா:
க-கரத்துக்கு ங-கரமும், ( அங்கு, பொங்கு)
ச-கரத்துக்கு ஞ-கரமும், (மஞ்சல், பிஞ்சு )
ட-கரத்துக்கு ண-கரமும், ( கண்ட, உண்ட)
த-கரத்துக்கு ந-கரமும், ( அந்த , இந்த )
ப-கரத்துக்கு ம-கரமும், (வம்பன், அம்பு)
ற-கரத்துக்கு ன-கரமும், ( மன்றம், கொன்று)
இவற்றை அக்காள் தங்கை என்று
நினைத்துக் கொள்க...
ன் வருமா, ண் வருமா, ந் வருமா என்ற
குழப்பங்கள் வரும்போது, அக்காள் தங்கை
என்ற நினைவு பயன்படும்...
-----------------------------------------------
இனி, புணர்ச்சி தொடர்கின்றது....
(6). பூப்பெயர் :
🔼🔼🔼🔼🔼🔼
நெறி:
" பூப்பெயர் முன்இன மென்மையுந் தோன்றும்"
- நன்னூல் :200.
நிலைமொழி இறுதியில் உள்ள பூ என்னும்
பெயர்ச்சொல்முன் வல்லின முதன்மொழி வந்து
புணரும்பொழுது அவ்வெழுத்துக்கு இனமான
(i) மெல்லெழுத்து மிக்குப் புணரும்,
எ-கா: பூ+ கொடி = பூங்கொடி (ககரத்திற்கு
இனமான மெல்லினம் ' ங்' மிக்குள்ளது)
(ii) வல்லெழுத்தும் மிக்குப் புணரும்.
எ-கா: பூ + செடி = பூச்செடி ( சகரத்திற்கு
இனமான வல்லினம் ' ச்' மிக்குள்ளது.
(7) மகர ஈற்றுப் புணர்ச்சி;
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼
நெறி:
" மவ்வீ றொற்றழிந் துயிரீ ரொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவும் ஆகும்."
( நன்னூல் - 219).
1. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு
புணரும்பொழுது இறுதி மகரம் கெட்டு உயிரீறு
போல நின்று வருகின்ற உயிர் முதன்மொழியோடு
உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
எ-கா:
மரம் + அடி > ( மகரம் கெட்டு) = மர+ அடி ஆகி,...
( உடம்படுமெய் பெற்று) > மரவ் + அடி ஆகி,...
( உடல்மேல் உயிர் வந்து ஒன்றி) > மர(வ்+அ) டி..ஆகி..
( இயல்பே என்னும் நெறிப்படி )= மரவடி என்றானது.
2. மகர ஈறு கெட்டு, வருமொழி முதலில் உள்ள
வல்லினம் மிக்குப் புணரும்.
எ-கா:
மரம் + கால் ( மகரம் கெட..) = மர + கால்...ஆகி,
மர + கால் ( ர்+அ= ர) > இயல்பினும், நெறியினும்,
நின்ற உயிர் (அ) முன் கசதப மிகுந்து..
= மரக்கால் ஆனது.
3. மகர ஈறு வருமொழி முதலில் உள்ள
வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத்
திரிந்தும் புணரும்.
எ-கா:
காலம் + கடந்தது = காலங்கடந்தது.
( வல்லினத்திற்கு - ' க' - இனமான மெல்லினம் ' ங்'
மிகுந்துள்ளது).
இனி , அடுத்த புணர்ச்சி நெறி தொடரும்....08.....
நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment