Thursday, 26 January 2017

குறள் கற்போம் - தொடர் -04

திருக்குறளை எளிமையாகக்
கற்போம். - தொடர் - 04
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

இனிய பெருந்தகையீர், வணக்கம்.

திருக்குறளை அனைவரும் எளிதில்
கற்றுக் கொள்ளும் முறையினை
விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள
இத்தொடரின் நான்காம் நிலைக்கு நாம்
இப்போது வந்துள்ளோம்.

கடந்த பதிவில், குறட்பாக்களின்
கடைசிச் சீர்-
நாள், மலர், காசு, பிறப்பு என்னும்
வாய்பாட்டில் உள்ள ஓரசைச் சீர்களில்
ஒன்றைக் கொண்டு முடியும் என்றும்,
இதனை விளக்கமாக அறிந்துகொள்ளக்
' குற்றியலுகரம்' என்னும் ஓர்
இலக்கணக் குறிப்பை அறிந்து கொள்ள
வேண்டியுள்ளது என்றும் அறிந்தோம்.

குற்றியலுகரத்தை அறியும்போதே, 
' மாத்திரை'
மற்றும், 'அளபெடை' -
என்றால் என்னவென்பதையும்,
அவை  எவ்வாறு நம் கற்றலுக்குத்
தேவையாகின்றன என்பதையும்
அறிந்து செல்வோம்.

மாத்திரை.
🌷🌷🌷🌷

  எழுத்துகளைப் பலுக்கும்போது
( உச்சரிக்கும்போது),
நாம் எடுத்துக் கொள்ளும் கால
அளவுக்கு மாத்திரை என்று பெயர்.
நாம் இயல்பாகக் கண்(களை)
இமைக்கின்ற நேரம் ஒரு மாத்திரை
ஆகும். மாத்திரை என்றால் அளவு
என்று பெயர். இங்கு ஓர் எழுத்து 
ஒலிக்கும் கால அளவைக் குறிக்கும்.

1) உயிர் அளபெடைக்கு ( அளபெடை
     பற்றிப்  பின்னர் அறியலாம்)
     மாத்திரை மூன்று (3).
எ-கா:  ஆஅ. - ( ஆ: 2+ அ: 1= 3).
*************

2) நெடிலுக்கு மாத்திரை இரண்டு (2).
எ-கா:  ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ.
*******************************

3)  குறிலுக்கு மாத்திரை ஒன்று (1).
எ-கா:  அ, இ, உ, எ, ஒ.
***********************

4) மெய்யெழுத்துகளுக்கும், எகா : 
      க், ச், ட், த், ப், ற் ..முதலியன ;

5) ஆய்த எழுத்துக்கும் : ஃ . ;

6) குற்றியலுகர எழுத்துகளுக்கும் :  -
     கு, சு, டு, து, பு, று. ;

7)  குற்றியலிகரத்திற்கும் : ( இ) :
எ-கா: நாடு + யாது= நாடியாது. -

    மாத்திரை :  அரை (1/2).
    *************************

8) ஆய்தக்  குறுக்கத்திற்கும்,
     மகரக் குறுக்கத்திற்கும்..
   மாத்திரை :  கால் (1/4).
  ***************************
எ-கா:  முள்+ தீது= முஃடீது
           ( ஆய்தக் குறுக்கம்)
          போன்ம் - (மகரக் குறுக்கம் ).

குறுக்கம் என்றால், ஓர் எழுத்து தன்
இயல்பான  ஒலியைப் பெறாமல் குறுகி
ஒலிப்பதைக் குறிக்கும்.

9)  ஐ - க்கான மாத்திரைக் குறிப்பு...
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

ஐ -
(1) தனியாக நின்று தன்னைத்தான்
        உணர்த்துப்பொழுது மாத்திரை :
        இரண்டு(2) ;
எ-கா:  ' ஐ '-( தன்னைத்தான் உணர்த்துதல்).
*************

(2)  வடிவம் மாறாமல் ஒரு சொல்லில்
       சேர்ந்து வந்தால், அதற்கு மாத்திரை
       ஒன்றரை (1 1/2) ;
எ-கா:  ஐவனம் -( சீருக்கு முன்னால் வந்தது).
*****************

(3)  வடிவம் சிதைந்து சீருக்கு முன்னால்
வந்தாலும் அதற்கு மாத்திரை
      ஒன்றரை - தான்!
எ-கா:  தைமாதம் - இங்கு ' ஐ' தன் வடிவம்
******************                                
சிதைந்து ' தை' - ஆக மாறி, சீருக்கு முன்னால்
வந்துள்ளது.

(4) உருவம் சிதைந்து சீரின் இடையில் வந்தால்
       மாத்திரை ஒன்று (1).
எ-கா: இடைவேளை - இங்கு 'ஐ' தன் வடிவம்
**********************
சிதைந்து 'டை' - ஆக சீருக்கு இடையில்
வந்துள்ளது.

இந்த மாத்திரைகளும் குறுக்கங்களும்  நம்
திருக்குறள் கற்றலுக்கு எவ்வாறு பயன்படு
கின்றன என்பதை அடுத்தடுத்துப் பார்க்க
விருக்கின்றோம்.

இனி,  'குற்றியலுகரம்'
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
பற்றிப் பார்ப்போம்.
தனிக் குற்றெழுத்து( குறில்)  அல்லாத 
மற்ற எழுத்துகளுக்குப் பின், சொல்லுக்கு
இறுதியில் வல்லின மெய்யின் மேல்
ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
வல்லின மெய்கள்: க், ச், ட் , த் , ப் , ற் - ஆவன.
இவற்றின் மேல் 'உ'கரம் ஏறினால் (கூடினால்)..

க் + உ = கு
ச் + உ = சு
ட் + உ = டு
த் + உ = து
ப் + உ = பு
ற் + உ = று.....  என்றாகும்.

ஆக,
கு, சு, டு, து, பு, று ..ஆகிய ஆறு எழுத்துகளும்,
குற்றியலுகரம் ஆகும்.
இயல்பாகக்,  குறில்கள்  ஒரு மாத்திரையை
உடையனவாயினும், அவை குற்றியலுகரமாகக்
கருதப்படும் இடங்களில் அரை மாத்திரையே
பெறும் என்பதை நினைவில் கொள்க.

வெண்பாவில், இவ்வாறான அரை மாத்திரையே
பெறும் மெய்யெழுத்துகளும், குற்றியலுகர
எழுத்துகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை
என்பதை ஒரு  குறிப்பாகக் கொள்ளவும்.

திருக்குறளில் குற்றியலுகரப் பயன்பாடு!
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

திருக்குறளில் ஏழாவதாத அமையப் பெற்ற
ஈற்றுச் சீர் ( கடைசிச் சீர்) அமைந்துள்ள
வகை பற்றியும், அதை எப்படிப் படித்தறிவது
என்பது பற்றியும் இப்போது பார்க்கலாம்.

திருக்குறளின் ஈற்றுச் சீர் ஓரசைச் சீராகவே
அமையும் என்பதையும், அது ' நாள், மலர், காசு,
பிறப்பு' - என்னும் வாய்பாட்டால் அமைவதாகும்
என்றும் முன்னர் பார்த்தோம்.
ஓரசைச் சீர் என்பதன் விளக்கத்தை
அறிந்துள்ளோம்.
இதைத்  திருக்குறளில் உள்ளவாறு காணலாம்.

1அ) " தொடிற்சுடின்  அல்லது  காமநோய் போல
         விடிற்சுடல்  ஆற்றுமோ  தீ "    ( திகு: 1159)

1ஆ) "மலர்மிசை  ஏகினான்  மாணடி  சேர்ந்தார்
           நிலமிசை  நீடுவாழ்  வார்."    (திகு: 03)
------------

2அ)  " வேண்டுதல்வேண்  டாமை  இலானடி
            சேர்ந்தார்க்கு
            யாண்டும்  இடும்பை  இல. "  ( திகு: 04)

2ஆ)  "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
           மற்றின்பம் வேண்டு  பவர்."   ( திகு: 173)
-------------

3அ)  "மங்கலம்  என்ப  மனைமாட்சி மற்றதன்
          நன்கலம்  நன்மக்கட்  பேறு. "  ( திகு: 60)

3ஆ)" வானின்று உலகம்  வழங்கி வருதலால்
       தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.  ( திகு: 11)
-----------

4)  " பொருளல்ல வற்றைப் பொருளென்று
       உணரும்
       மருளானாம்   மாணாப்  பிறப்பு. "  (திகு: 351)
----------

மேற்கண்ட வாய்பாட்டின் விளக்கமாக
இந்த நான்கு குறள்களையும் ஓர் எடுத்துக்
காட்டாகக் கொள்ளவே இவை இங்குத் தரப்
பெற்றுள்ளன.

நாள், மலர், காசு, பிறப்பு - இவை நான்கும்
ஓரசைச் சீர்களே!

1. நாள்.
*******
ஒரு நெடில் எழுத்து தனித்தோ, ஒற்றடுத்தோ
வந்தாலும் ஓரசையே.
    ' நாள்'  - என்பதில் ' நா' நெடில் தனித்தும்,
     'ள்'  என்னும் ஒற்றை அடுத்தும் வந்துள்ளதால்
    இதனை ' நாள்' வாய்பாட்டில் கொள்க.

1அ) - குறளில், ' தீ '  என்று முடிக்கப்பட்டுள்ளது.
          இதில், ஒரு நெடில் தனித்து நின்று ஓரசைச்
           சீராக நின்றுள்ளதை நோக்கவும்.

குறிப்பு:-
---------------
திருக்குறளில் ஒரு நெடில் மட்டுமே தனித்து
நின்று ஓரசையாக முடியப்பெற்றுள்ள குறள்
இது மட்டுமேயாகும் என்பது இக்குறளுக்கான
சிறப்பென அறிக!

1ஆ) - குறளில்,  ' வார்' என ஒரு நெடில்
       ஒற்றடுத்து  வந்துள்ளது.

இவை இரண்டையும்  ' நாள்' என்னும் வாய்பாட்டுக்கு
எடுத்துக்காட்டாகக் கொள்க.
-----------
மேலும் இந்த அசை ' நேர்' அசை என்றும்
செய்யுளில் அலகிடுகையின் ( அசை பிரித்தல்)
போது விளக்கப்படும். நினைவில் கொள்ளவும்.
----------

2. மலர்.
*******
இரண்டு குறில் இணைந்தும், ஓர் ஒற்றடுத்தும்
வந்தாலும் ஓரசையே.
1அ) - குறளில்,  ' இல' என்று இரு குறில் மட்டும்,
1ஆ) - குறளில்,  ' பவர்' என்று ஓர் ஒற்று அடுத்தும்
           வந்துள்ளதால் இதனை 'மலர்'  வாய்பாட்டில்
           கொள்க.
-------------
இது,
செய்யுளில் அலகிடும்போது ' நிரை' அசையாகக்
கொள்ளப்படும். நினைவில் கொள்ளவும்.
-----------

3. காசு :
********
இதில், ஒரு நெடிலோடு (அல்லது ஓர் ஒற்று
இணைந்தும்) குற்றியலுகர எழுத்துகளில்
ஒன்றாகிய ' சு' எழுத்தையோ, மற்ற ஐந்து
எழுத்துகளில் ஒன்றையோ கொண்டிருக்கும்.
இதுவே ' காசு' வாய்பாடு ஆகும்.
இதில் ' கா' என்னும் நெடில் மட்டுமே கணக்கில்
சேரும். ' சு' குற்றியலுகர எழுத்தாகையால்
அரை மாத்திரையே பெற்றுக் கணக்கில்
கொள்ளப்படாது.

3அ) - குறளில், ' பேறு' என்று ஒரு நெடிலோடு,
        ' று' என்னும் ஒரு குற்றியலுகர எழுத்தும்
         வந்து ஓரசையாகக் குறளின் ஈற்றில்
         நிற்பதை நோக்கவும். இங்கு ' று' கணக்கில்
         சேராது.

3ஆ) - குறளில்,  ' பாற்று' என்று ஒரு நெடிலும்,
         ஓர் ஒற்றும், ' று' என்னும் ஒரு குற்றியலுகர
         எழுத்தும் நின்றுள்ளதைப் பார்க்கவும்.
          இங்கு, ' பா' என்பது இரண்டு மாத்திரை
          பெற்ற ஒரு நெடில் ஆகும். அடுத்துள்ள
          ற், று  இரண்டும் தனித்தனியே அரை
          மாத்திரையே பெற்று, மதிப்பின்றி கணக்கில்
          கொள்ளப்படா. எனினும் குற்றியலுகரத்தில்
          முடியப் பெற்றுள்ளதால், இதுவும் ' காசு'
          வாய்பாட்டில் அடங்கும்.

4.பிறப்பு.
***********
இறுதியாகவுள்ள வாய்பாடு ' பிறப்பு' ஆகும்.
இதில், ' பிற' என்னும் இரண்டு குறில் மட்டுமே
கணக்கில் வரும். மேலே பார்த்ததைப் போலவே,
ப்பு - இரண்டும் கணக்கில் கொள்ளப்படா.

4) - குறளில், இதே ' பிறப்பு' என்னும் சொல்லே
       வந்து குறளின் ஈற்றில் ஓரசையாகவே
       நிற்கின்றது.
இவ்வகையான வாய்பாட்டில் இவ்வாறு நான்கு
எழுத்துகள் இருந்தாலும், இரு குறில் மட்டுமே
முதலில் நின்று, ' மலர்' என்பதைப் போன்றே
இதுவும் செய்யுள் அலகிடுகையில் ' நிரை' என்றே
கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆக,
நாள், காசு - இரண்டையும் 'நேர்' அசை என்றும்,
மலர், பிறப்பு - இரண்டையும்  'நிரை'  அசை என்றும்
கொள்க.

எஞ்சியவற்றை அடுத்த பதிவில் கற்போம்..
நன்றி.
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன். .
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈



    

    

No comments:

Post a Comment