விருந்தோம்பல் போற்றுதும்!(அதி.10)
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
ஞாலத்( து) உயர்ந்த. நற்றமிழ் போற்றுதும்!
இல்வாழ் வில்விருந்(து) ஓம்பல் போற்றுதும்!
விருந்தினர் தம்மை வெளியில் வைத்து
அருந்தும் உணவோ அமுதே யாயினுஞ்,
சாவினை நீக்குஞ் சால்பைப் பெறினும்
அருந்தா( து) ஒழிவதே அறமெனப் போற்றுதும்!
வந்திடும் விருந்தை வைகலும் ஓம்பலே
வந்திடும் வறுமையை விரட்டும் வழியென
வள்ளுவர் உரைத்த வழிமுறை போற்றுதும்!
விருந்தினர் வருகையை விரும்பி ஏற்பவன்
இருப்பிடம் நோக்கி உறைந்திட வருவாள்
செய்யாள் என்னுஞ் செல்வம் உடையாள்;
செல்லும் விருந்தைச் செவ்வனே போற்றி
வந்திடும் விருந்தின் வருகை நோக்கி
என்றும் வாழ்பவன் அருமை போற்றுதும்!
விருந்தினை ஏற்காது வாழ்பவன் செல்வம்
வருந்திக் காக்கினும் வற்றியே போகுமாம்;
வளமையுள் வறுமை விருந்தோம் பாமை,
உளதாம் அஃதும் அறிவிலார் இடத்தே!
மோந்தால் வாடிடும் மலராம் அனிச்சம்,
அங்ஙனம் வாடுவர் அன்பிலா விருந்தினர்!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்,
ஞாலத்(து) உயர்மொழி நம்தமிழ் என்றே!
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔
No comments:
Post a Comment