செய்ந்நன்றி போற்றுவோம்![அதி.11]
🔮 🔮 🔮 🔮 🔮 🔮 🔮 🔮 🔮 🔮
செவ்வாய் போற்றுதும்
செவ்வாய் போற்றுதும்!
செய்யா மலுதவி
செய்தவர் போற்றுதும்!
காலம் அறிந்து
கொடுத்த உதவி
ஞாலம் மிகுமென
நயந்து போற்றுதும்!
செய்த உதவி
சிறிதே யாயினும்,
செய்ந்நன் றியறிவது
சீரியர் பண்பாம்!
மறவா( து) இருப்போம்
மாசிலார் உறவைத்
துறவா (து) காப்போம்
தொய்விலார் நட்பை!
எழுமையும் நமது
இன்னல் நீக்கிய
பழுதிலார் நட்பைப்
பற்றிக் கொள்வோம்!
கொல்லு வதுபோல்
கொடுமை செய்யினும்
உள்ளு வோமவர்
ஈந்தநன்(று) ஒன்றை!
நன்றி மறப்பது
நல்ல தல்ல,
நல்ல(து) அல்லன
நினைப்பதை மறப்போம்!
எந்நன்றி கொன்றோர்
உய்வு பெறினும்,
செய்நன்றி மறப்பார்
சிதைந்தே போவரே!
செவ்வாய் போற்றுதும்
செவ்வாய் போற்றுதும்;
செய்த உதவியின்
சீர்மை போற்றியே!
-----------------------------
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨
No comments:
Post a Comment