Thursday, 26 January 2017

குறள் கற்போம் - தொடர் -05

திருக்குறளை எளிமையாகக்
கற்போம். - தொடர் - 05.
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

இனிய பெருந்தகையீர், வணக்கம்.

திருக்குறளை அனைவரும் எளிதில்
கற்றுக் கொள்ளும் முறையினை
விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள
இத்தொடரின் ஐந்தாம்  நிலைக்கு நாம்
இப்போது வந்துள்ளோம்.

முந்தைய பதிவில் குற்றியலுகரம் பற்றியும்,
திருக்குறளில்  உள்ள எல்லாக் குறட்பாக்களுமே
நாள், மலர், காசு, பிறப்பு என்னும் ஓரசையிலான
வாய்பாட்டில் ஏதேனும் ஒன்றையே ஈற்று
அசையாகக்   கொண்டு முடியும் என்பதையும்
அறிந்தோம்.
வெண்பாவினால் அமையப்பெற்ற  எல்லாப்
பாடல்களுக்குமே இதுவொரு பொது நெறியாகும்.

' வு' கரமும் திருக்குறளும்:
↔↔↔↔↔↔↔↔↔↔
குற்றியலுகர எழுத்துகளாக :
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள்
எனக் கண்டோம். ஆனால்,
திருவள்ளுவர் காலத்தில் , ' வு'  என்னும்
எழுத்தும் குற்றியலுகரமாகவே கருதப் பட்டுள்ளது
எனத் தெரிகின்றது. அவ்வெழுத்துமே, மற்ற
குற்றியலுகரம் போன்று அரை மாத்திரையே
பெற்றுக்  குறளுக்கு ஈற்றசையில்
இறுதி எழுத்தாக நின்று குறள்கள் முடிக்கப்
பட்டுள்ளதைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில்
அறியவும்.

1) ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
     வேண்டும்  பனுவல்  துணிவு. ( திகு: 21)

2) கெடுவாக வையாது  உலகம் நடுவாக
    நன்றிக்கண்  தங்கியான் தாழ்வு. ( திகு: 117)

3) அழுக்கா  றுடையான்கண்  ஆக்கம்போன்று
      இல்லை
     ஒழுக்கம்  இலான்கண்  உயர்வு. ( திகு: 135)

இப்படியாக,  
துணிவு   - [ திகு: 21 , 533],
தாழ்வு     - [ திகு: 117],
உயர்வு    - [ திகு: 135, 595, 963],
அளவு      - [ திகு: 224],
அறிவு      - [ திகு: 335, 358, 396, 422, 423, 424,
                        திகு: 425, 426, 452, 454
தெளிவு   - [ திகு: 502, 513 ],
சோர்வு    - [ திகு: 531, 654, 930],
செறிவு    - [ திகு: 715],
பணிவு    - [  திகு: 960],
புணர்வு   - [ திகு: 1152, 1155],
பிரிவு       - [ திகு: 1152],
இரவு        - [ திகு: 552, 1280],
கதவு        - [ திகு: 1252]
என
ஏறத்தாழ முப்பது குறட்பாக்கள் இது
போன்று ' வு'  கரத்தில் முடிந்துள்ளன ;  எனினும்
இக்காலத்தில் இம்  முறையில் வெண்பா
இயற்றப்படுவதில்லை.
ஆகவே, குறள்களைப் படிக்கும்போது குழப்பம்
அடையக் கூடாது என்பற்காக இவற்றை அறிந்து
கொள்வதும் தேவையாகின்றது.

இனி,
திருக்குறளைப் படித்து அறிந்து கொள்வதற்குத்
தேவையாகும்  மேலும் சில முகமையான
இலக்கணக் குறிப்புகள் பற்றியும் அறிந்து
கொள்வோம்.

புணர்ச்சி:
🔺🔺🔺🔺

திருக்குறளில் உள்ள சொற்களைப் பிழைகள்
இல்லாமலும், கருத்து மாறாமலும்  படித்துத்
தெரிந்து கொள்வதற்குப் ' புணர்ச்சி' என்னும்
இலக்கண அமைவை அறிந்து கொள்வதும்
மிகத் தேவையாகும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்றொடரில் உள்ள
சொற்களை,
நிலைமொழி என்றும் (நின்ற சொல்) என்றும்
வருமொழி (வரும் சொல்)  என்றும்
இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
ஏதேனும் இரண்டு  சொற்களை இணைக்கும்
போது முதலில்   நிற்கும் சொல் 'நிலைமொழி'
என்றும், அச்சொல்லை அடுத்துத்  தொடர்ந்து
வரும் சொல், 'வரும் மொழி'  என்றும் கொள்ளப்
படும். நின்ற சொல்லோடு வரும் சொல் சேர்வதே
புணர்ச்சி என்பதாகும். புணர்ச்சி என்பதற்கு
இணைப்பு அல்லது சேர்க்கை  என்று பொருளாகும்.
இஃது இரு வகைப்படும்.
ஒன்று
இயல்புப் புணர்ச்சி ;  மற்றொன்று
மாற்றப்  புணர்ச்சி (விகாரப் புணர்ச்சி -
விகாரம் : வடசொல் என்பதால் மாற்றம் எனக்
கொள்ளவும்)
ஆகும்.

🚫  இயல்புப் புணர்ச்சி.
--------------------------------------
நின்ற சொல்லொடு வரும்சொல் சொல் சேரும்
பொழுது எந்தவகை மாற்றமும் நிகழாமல்
இயல்பாக இருப்பது இயல்புப் புணர்ச்சி எனப்படும்.

எ-கா: தமிழ்+ வளம் = தமிழ் வளம் .
தமிழ் என்னும் நின்ற சொல்லுடன் வளம் என்னும்
சொல் வந்து சேர்ந்து , தமிழ்  வளம் என்றே  இடையில்
எந்த எழுத்தும்  சேர்க்கபடாமல் இயல்பாகவே
இருப்பதைக் காணலாம்! இதுவே இயல்புப்
புணர்ச்சி ஆகும்.
நல்ல + நூல் என்பது  = நல்ல நூல் என்று இடையில்
எந்த எழுத்தும் சேர்க்கப் படாத நிலையே இயல்புப்
புணர்ச்சியாகும்.

🚫 மாற்றப் புணர்ச்சி. ( பொதுவான நெறி)
--------------------------------------------------
   நின்ற சொல்லுடன் வரும் சொல் சேரும்பொழுது
மாற்றம் நிகழ்வது மாற்றப் புணர்ச்சி ஆகும்.
மாற்றப் புணர்ச்சி -   தோன்றல் , திரிதல் ,
கெடுதல் மாற்றம்  என மூன்று  வகைப்படும்.

1) தோன்றல் மாற்றம்:
↔↔↔↔↔↔↔↔↔
நின்ற சொல்லொடு வரும் சொல் சேரும்பொழுது
இரண்டு சொற்களுக்கும் இடையில் ஓர் எழுத்துத்
தோன்றுவது தோன்றல் மாற்றமாகும்.
எ-கா:
ஏழை + குடும்பம் = ஏழைக் குடும்பம். இதில் ஏழை
      என்னும் நின்ற சொல்லுக்கும் குடும்பம் என்னும்
வந்த சொல்லுக்கும் இடையில் ' க் '  என்னும் ஒரு
மெய்யெழுத்துத் தோன்றியுள்ளது.

2) திரிதல் மாற்றம்:
↔↔↔↔↔↔↔↔
   நின்ற சொல்லுடன் வரும் சொல் சேரும்பொழுது
வரும் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாக
இருந்தால், நின்ற சொல்லின் இறுதியில் உள்ள
மெய்யெழுத்துத் திரியும் ; அதாவது மாறுதல்
அடையும் ; அதுவே திரிதல் மாற்றம்  எனப்படும்.
எ-கா:
வில் + பொறி = விற்பொறி .
வில் என்னும் நின்ற சொல்லுடன் பொறி என்னும்
சொல் வந்து சேர்ந்ததால்  " ல் " என்னும்
நின்ற சொல்லின் இறுதி மெய் எழுத்து
" ற்" என்று திரிந்து
மாற்றம் பெற்றுள்ளது.

3) கெடுதல் மாற்றம் :
↔↔↔↔↔↔↔↔↔
    நின்ற சொல்லுடன் வரும் சொல் சேரும்பொழுது,
நின்ற சொல்லின் இறுதியில் உள்ள எழுத்து
இல்லாமல் போய்விடுவது, அதாவது கெட்டுவிடுவது
கெடுதல் மாற்றம் ஆகும்.
எ-கா:
மரம் + வேர் = மரவேர்.  இங்கு மரம் என்னும்
நின்ற சொல்லுடன் வேர் என்னும் சொல் வந்து
சேர்ந்ததால், நின்ற சொல்லாகிய மரம் என்னும்
சொல்லிலிருந்த மகர மெய் ( 'ம் ')கெட்டுவிட்டது.
குறிப்பு:
--------------
இதுவரையில் கண்ட தோன்றல், திரிதல், கெடுதல்
ஆகிய மூன்றும் பொது மாற்றங்களாகும்.
இவை உரைநடைக்கும் செய்யுளுக்கும் பொதுவாக
உரியவை. ' செய்யுள் மாற்றம்'  என்னும் ஓர்
இலக்கண வகை செய்யுளுக்கே உரியது.
அதுபற்றித் தொடர்ந்து (ஆங்காங்கே
தேவைப் படும்போது)  அறியலாம்.

உடம்படு மெய் :
🔺🔺🔺🔺🔺🔺
  இதுவும் புணர்ச்சி நெறியின் தொடர்ச்சியே
ஆகும்.  இதுபற்றி அடுத்த பதிவில் அறிந்து
கொள்வோம்.                                ( தொடரும்.. 06).

நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨 🎨

No comments:

Post a Comment