Thursday, 26 January 2017

குறள் கற்போம் - தொடர் - 06

திருக்குறளை எளிமையாகக் கற்போம். - தொடர் - 06 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 இனிய பெருந்தகையீர், வணக்கம். திருக்குறளை அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் முறையினை விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள இத்தொடரின் ஆறாம் நிலைக்கு நாம் இப்போது வந்துள்ளோம். முந்தைய பதிவில், குறள்களை ஒருவர் கற்று அறிவதற்குப் புணர்ச்சி நெறிளைக் கற்றுக் கொள்வது இன்றியமையாதது என்று பார்த்தோம். இவை திருக்குறளில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதையும் பார்க்கவிருக்கின்றோம். புணர்ச்சி என்பது இயல்புப் புணர்ச்சி என்றும் மாற்றப் புணர்ச்சி( விகாரப் புணர்ச்சி ) என்றும் இருவகையினது என்பதையும் அறிந்தோம். அடுத்து, உடம்படுமெய் ( உடன்படு மெய்) ↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ என்னும் புணர்ச்சி நெறியைப் பற்றிப் பார்க்கலாம். நிலைமொழியின் ( நின்ற சொல்) இறுதியில் உயிர் ஒலியிருந்து, அதாவது உயிரெழுத்து இருந்து, வருமொழியின்( வரும் சொல்) முதலிலும் உயிரெழுத்து இருக்குமானால், உயிரும் உயிரும் ஒன்று சேராது. அதாவது ஓர் உயிர் இருக்கும் பொழுது அதன்மேல் மேலும் ஓர் உயிர் ஏற இடந் தாராது. அதனால், உயிர் ஏற இடம் தரக்கூடிய உடம்பு ஒன்று தோன்றி வந்த உயிரை ஏற்றுக் கொள்ளும். இதுவே உடம்படுமெய் என்று கூறப்படும் புணர்ச்சி எனப்படும். ( குறிப்பு : காதலர் இருவர் தம் ஈருயிரும் ஒன்றாக இணைந்து ஓர் உயிரானது என்று கூறுவது ஒரு பாவியக் கற்பனையே! ஈருடலும் இணைந்து ஓர் உடல் ஆனது என்றும் கூறுவர் என்பதையும் நோக்குக!) 1) உயிரீற்றுப் புணர்ச்சி: 🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏 இதற்கான நன்னூலார் நெறி ( விதி) : " இஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் னிவ்விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். " (நன்.162) அதாவது, நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ ஆகிய இந்த மூன்று உயிர் எழுத்துகளுள் ஒன்று இருந்து, வருமொழியின் எந்த உயிர் எழுத்து இருந்தாலும், இடையில் யகர உடம்படுமெய் ( ய்) தோன்றித், தோன்றிய அந்த மெய்யின்மீது வந்த உயிர் ஏறி நிற்கும். எ-கா: [ கிளி (ளி > (ள்+இ ) (இ) + அழகு = கிளியழகு]. இங்கு நிலைமொழியின் இறுதியில் ' இ' என்னும் ஒலிபெற்ற உயிர் எழுத்து நிற்க, வருமொழியின் முதலில் ' அ' என்னும் உயிர் எழுத்து இருப்பதால், இடையில் ய் என்னும் மெய்யெழுத்துத் தோன்றி, அதன்மேல் மேற்சொன்ன ' அ' என்னும் உயிர் எழுத்து ஏறும்போது (ய்+ அ= ய) ' ய' என்னும் உயிர்மெய் தோன்றி ' அழகு ' என்பது ' யழகு' என மாறிவிடும். அதுவே, கிளி+ அழகு = கிளியழகு என்றானது. விழி+ அழகு= விழியழகு ; வெற்றி+ இல்லை = வெற்றியில்லை ( இங்கு ' இ' வந்ததால் யிகரமானது. இதேபோன்றுதான் ஏனைய எழுத்துகளும் புணரும். தீ (ஈ) + அழல் = தீ( ய) ழல் = தீயழல். மை (ஐ) + அழகு = மை ( ய)ழகு= மையழகு. இவை யகர உடம்படுமெய் (ய்) பெற்றவை. மற்ற உயிரெழுத்துகளாகிய... அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ, ஔ ஆகிய எட்டு எழுத்துகளும் நிலைமொழியின் இறுதியிலிருந்து, வருமொழியின் முதலில் எந்த உயிரெழுத்து இருந்தாலும் இடையில் வகர உடம்படுமெய் ( வ்) தோன்றும். தோன்றிய அந்த வகர மெய்யின்மேல் வந்த உயிர் ( மேலே பார்த்தது போன்று) ஏறி நிற்கும். எ-கா:. பல (அ) + இடங்கள் = பல+(வ்+இ = வி) டங்கள். = பலவிடங்கள். ( இது போன்றே...) பலா (ஆ) + அடியில். = பலாவடியில். நடு ( உ)+ இடம் = நடுவிடம். பூ (ஊ) + அழகு = பூவழகு. எ ( எ ) + அழகு = எவ்வழகு? (எ- வினாச்சுட்டு) நொ (ஒ)+ அகலும் = நொவ்வகழும் ( நொ- துன்பம்). கோ (ஓ) + இல் = கோவில். கௌ ( ஔ) + அழுக்கு = கௌவழுக்கு : (கௌவுதல் = திருடுதல் ; அழுக்கு = குற்றம்). இவை வகர உடம்படுமெய் ( வ்) பெற்றவை) ஏ- காரம் :- --------------- (1) ஏ - நிலைமொழியின் இறுதியில் இடைச்சொல்லாக- அதாவது, அசைநிலையாக இருந்தால்.. ய- கர உடம்படு மெய்யும், (2) நிலைமொழி பெயர்ச் சொல்லாக இருந்தால் வ - கர உடம்படு மெய்யும், (3) நிலைமொழி பண்புச் சொல்லாக இருந்தால்.. ய - கர , மற்றும் .. வ - கர உடம்படு மெய் ஆகிய இரண்டும் தோன்றும். எ-கா: ==== அவனே (ஏ) + அழகன் = அவனே யழகன். ( இங்கு ஏ- காரம் அசைநிலையாக வந்துள்ளது). ஏ + எலாம் = ஏவெலாம். ( இங்கு ஏ -காரம் அம்பு என்னும் பெயர்ச் சொல்) சே + அடி = சேயடி ; சே + அடி = சேவடி .. ( இங்கு சே என்பது செம்மை என்னும் பண்புச் சொல்லைக் குறிப்பதால் யகரம் , வகரம் ஆகிய இரண்டு உடம்படு மெய்களும் வந்துள்ளன ). [ சே என்றால் எருது என்னும் பெயர்ச் சொல்லும் உண்டு..இங்கு அதைக் குறிக்கவில்லை என்க]. குறிப்பு : """""""""""""" முற்காலத்தில், ஆ - வுக்கும் ஏகாரம் போன்றே, வகரமும் யகரமும் உடம்படு மெய்களாக அமைந்திருக்கின்றன. (1) - நிலைமொழி (ஆ) பெயர்ச் சொல்லாக இருந்தால் வகரமும், (எ-கா: ஆ + ஆன = ஆவீன > ஆ - பசு > பெயர்ச் சொல்) (2) - நிலைமொழி (ஆகாரம்)அகரம் நீண்டு சுட்டுச் சொல்லாக வந்தாலும், அல்லது உரிச் சொல்லாக அமைந்தாலும் ( எ-கா: ஆ + இடை = ஆயிடை : ஆ - இங்கு அகரச் சுட்டு நீண்டதாலும், மா + இருஞாலம் = மாயிரு ஞாலம் - பேருலகம்> இங்கு ஆ : மா : > உரிச் சொல்லாக வந்ததாலும் ) யகர உடம்படு மெய் தோன்றும். ----------------- 2) குற்றியலுகரப் புணர்ச்சி. 🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏 இதற்கான நன்னூல் நெறி: 🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼 " உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோ வழி". 🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼 அதாவது, (1) வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்து, நிலைமொழி இறுதியில் கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு குற்றியலுகர எழுத்துகளில் ஒன்று நின்றால், நிலைமொழியின் இறுதியில் நிற்கும் குற்றியல் உ -கரம் தன் மெய்யை விட்டுவிட்டுப் போய்விடும். இந்த மெய்யெழுத்தின் மேல், வருமொழியின் முதலில் நிற்கும் உயிரெழுத்து ஏறி நிற்கும். எ-கா: கொக்கு + அழகு = கொக்கழகு. காசு + அகலும் = காசகலும். நாடு + என்னுயிர் = நாடென்னுயிர். காது + இரண்டு = காதிரண்டு. மார்பு +அகன்றது = மார்பகன்றது. ஆறு + அழகு = ஆறழகு. கொக்கு என்னும் வன்றொடர் குற்றியலுகரம் நிலைமொழியின் இறுதியில் இருக்க- வருமொழியின் முதலில் அழகு என்ற உயிரெழுத்தை முதலாகவுடைய ஒரு சொல்லில் ' அ' வந்துள்ளதால், நிலைமொழியின் இறுதியில் இருந்த ' கு' என்பதில் இருந்த உ கரம் போய், ( க்+ உ= கு) ' க்' நின்றது. நின்ற மெய்யான ' க்' மீது வந்த உயிராகிய ' அ ' ஏறிக், (க் + அ= க) கொக்கழகு என்றானது. இவ்வாறே மற்ற சொற்களும் மாற்றம் பெற்றுள்ளன. (2) வருமொழியின் முதல் எழுத்து யகரமாக இருந்தால் குற்றியலுகரம் இகரமாய் மாறும். எ-கா: பாகு + யாது= பாகியாது. காசு + யாது = காசியாது. (3) முற்றியலுகரமாக இருப்பினும், குற்றியலுகரம் போலவே உகரம் மறையும். முற்றியலுகரம் என்பது யாது? 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 1. தனி எழுத்தாக உள்ள எல்லா உகரமும் முற்றியலுகரமே. எ-கா: உ , கு, சு, டு, ணு, து, பு, ரு, ழு, ளு, று, னு. 2. தனிக் குற்றெழுத்தை அடுத்து வரும் உகரமும், எ-கா: நகு, பசு, படு, கணு, அது, தபு, கரு, புழு, மறு.. 3. இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்டு வருகின்ற சொல்லின் இறுதியில் கு, சு, டு, து, பு, று தவிர மற்ற உகரங்களும், எ-கா: கதவு, புறவு, அரவு, அலமு, விழவு, உழவு... 4. சொல்லுக்கு முதலில் வரும் உகரங்களும் எ-கா: குடதிசை, துவரை... (அனைத்தும்) முற்றியலுகரங்களே. 🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌🎌 இப் புணர்ச்சி நெறிகளைக் கொண்டு திருக்குறளில் உள்ள குறட்பாக்களைப் படித்தறிவது எப்படி என்று ஓர் எடுத்துக் காட்டினைக் கொண்டு பார்க்கலாம். வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறட் செய்யுள் வடிவினை ' மூலபாடம் ' என்றுதான் கொள்ளப்படும். அது புணர்ச்சிகள் பிரிக்கப்படாமல் அமைந்திருக்கும். நாம் புழக்கத்தில் வைத்திருப்பவை புணர்ச்சிகளைப் பிரித்து உரைநடை போன்ற குறட்பாக்களும் அவற்றிற்குரிய விளக்க உரைகள் கொண்ட உரைநூல்களாகவே பெரும்பான்மையாக இருக்கும். எ-கா: மூலபாடம் : ------------------- ' அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.' ( திகு: 75) இக் குறளை அப்படியே மூலபாடத்தில் ஒருவர் படித்தறிவது எளிதன்று. அதனால்தான் உரைநடை போன்று பிரித்துப் படிக்கின்றோம். உரைநடைப் பாடம் : -------------------------------- மேற்கண்ட குறளை உரைநடை போன்று மாற்றினால், ' அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.' - என்று அமையும். நாம் முன்பாகக் கண்ட புணர்ச்சி நெறிகளைக் கொண்டு இக்குறளைப் பிரித்துப் பார்த்தால்... அன்புற்று + அமர்ந்த = அன்புற் றமர்ந்த - இங்கு ' று' வில் உகரம் ' ற் ' என்னும் மெய்யை விட்டுச் செல்ல, வருமொழியில் உள்ள உயிரெழுத்தாகிய ' அ' நின்ற மெய்யின் மேல் ஏறி ' ற' என்று மாற, வருமொழி ' றமர்ந்த - என்றானது. இதேபோன்றே, வைகத்து + இன்புற்றார் = வையகத் தின்புற்றா( ர்) என்றும், தின்புற்றார் + எய்து( ஞ்) = தின்புற்றா ரெய்து(ஞ்) [ இங்கு நிலைமொழியில் நின்ற ' ர்' வருமொழியில் வந்த உயிருடன் ( எ) ஏறி , ' ரெ' ] என்றும், எய்தும் + சிறப்பு = எய்துஞ் சிறப்பு - [ இங்கு நிலைமொழியின் ' ம்' , வருமொழியில் ' சி' இருப்பதால் சகரத்தின் இன எழுத்தாகிய ஞகரமாக ( ஞ்)] என்றும் மாறியுள்ளன. ( இன எழுத்து என்றால் என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்). ஈற்றுச்(இறுதி) சீர், வெண்பா இலக்கணத்தைத் தழுவி, ' பிறப்பு' என்னும் வாய்பாட்டால் (இங்கு) 'சிறப்பு' என முடிந்துள்ளதை அறிக. ↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ தொடரும்..07.. நன்றி, அன்புடன் உங்கள், குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன். 🎨🔺🎨🔺🎨🔺 🎨 🔺 🎨 🔺. 🎨. 🔺 🎨 🔺

No comments:

Post a Comment