Tuesday, 17 January 2017

குறள் கற்போம் - தொடர் - 02

தமிழ்ப் பட்டறை.
🔩🔩🔩🔩🔩🔩

திருக்குறளை எளிமையாகக்
கற்று அறிவோம்! - தொடர் - 02
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இனிய பெருந்தகையீர், வணக்கம்.

நம் முந்தைய பதிவில், திருக்குறளை
அனைவரும் மிகவும் எளிமையாக
அறிந்து கொள்ளலாம் என்னும்
செய்தியையும், திருக்குறள் நூலின்
அமைப்பு முறை எவ்வாறு
பகுக்கப்பட்டுள்ளது என்பதையும்,
சுருக்கமாக அறிந்து கொண்டோம்.

திருக்குறளில் அமைக்கப்பட்டுள்ள
எட்டு வகையிலான இயல்களில்,
பாயிரவியல் என்பதே முதற்கண்
அமைக்கப் பெற்றுள்ளது. இனி,
இப் பாயிரவியல் பற்றிய அமைப்பையும்
அதன் உள்ளுறைப் பொருள்களைப்
பற்றியும் தொடர்ந்து அறிவோம்.

1.) பாயிரவியல்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

பாயிரம் பற்றிய இயல்பினைப் பற்றிப்
பேசுவதால் இது பாயிரவியல் எனப்பட்டது.

ஒரு நூலை இயற்றுபவர் அல்லது எழுதுபவர்
அந்நூலை அறிமுகப் படுத்தும்போது
பொதுவாக ஓர் இறைமைப் பொருளையோ
அல்லது  அந்நூலைப் படைப்பதற்குத் தமக்குத்
துணையாக அமைந்த ஒருவரையோ, ஒரு
பேராற்றலையோ வணங்கியோ, வழுத்தியோ,
வாழ்த்தியோ தம் நூலைத் தொடங்குவது ஒரு
மரபாகும். அவ்வாறு எழுதுவதை அந்நூலின்
முதல் அதிகாரமாக வைத்து எழுதுவதும்
மரபாகும். இதுவே பாயிரம் எனப்படுவதுமாகும்.

இப் பாயிரம் என்பது நூலாசிரியர் கருதும்
வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைப்பு
களையோ அல்லது அதிகாரங்களையோ
கொண்டு அமையலாம்.

திருவள்ளுவர் தமது நூலைப் படைக்கும்போது
சில முகமையான செய்திகளை முதலில்
சொல்லித் தம் நூலை இயற்ற எண்ணியுள்ளார்.
அவ் வகையில் அவர் இவ்வுலகம் இயங்குவதற்கு
அடிப்படையான சில செய்திகளை நான்கு
அதிகாரங்களில் முன்னதாகச் சொல்லிவிட்டு,
மாந்தவினத்தின் வாழ்வியலின் தொடக்கமாகிய
இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தை ஐந்தாவது
இடத்தில் வைத்துத் தொடங்கியுள்ளார் என்பதே
நூலின் அமைப்பாக உள்ளது.

அவ் வகையில்,
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன்வலியுறுத்தல்

என்னும் நான்கு அதிகாரங்கள் முதலில்
அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் முதல் மூன்று அதிகாரங்களைப்
பற்றிப் பின்னர் முறையாகப்  பார்க்கலாம்.
நான்காவதாகிய அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்திலிருந்து நம் கற்றலைத்
தொடங்கவிருக்கின்றோம்.

அன்புடையீர்,
குறட்பாக்களைத் தனித்தனியாக அறிந்து
கொள்வதற்கு முன்பாக, அக் குறட்பாக்கள்
அமைந்துள்ள வகைமை பற்றித் தெளிவாக
அறிந்து கொண்டால்தான் வள்ளுவர் தம்
நூலில் படைத்துள்ள நுட்பங்களை அறிந்து
கொண்டு, திருக்குறளை எளிமையாகப்
படித்தறியும் ஆற்றலையும் நாம் பெறமுடியும்.
ஆகவே, திருக்குறளின் பா அமைப்பு,
சொல்லாட்சி, உவமை மற்றும் அணிவகை
ஆளுமை, உள்ளிட்ட அனைத்து விவரங்
களையும் இனிக் காணலாம்.

ஆங்காங்கே குறள்களிலிருந்து எடுத்துக்
காட்டுகளுடன் இக் கற்றல் நிகழவிருப்பதால்,
மிகவும் கவனத்துடன் கற்றறிய வேண்டும்
என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவும்.
இவற்றைத், திருக்குறளை அறிந்து
கொள்வதற்கான  இன்றியமையாக்
குறிப்புகளாகவும் கொள்ளலாம் என்க.

1.  நூலின் பெயர்ச் சிறப்பு:
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

திருக்குறள் பல பெயர்களில் வழங்கப்
பெறுகின்றது. தெய்வநூல், பொய்யாமொழி,
திருவள்ளுவம்,  தமிழ் மறை,
உலகப் பொதுமறை,முப்பால், குறள் போன்றவை
அவற்றுள் சில. திரு என்னும் சொல்லுக்குப்
பொதுவாகச் செல்வம், சிறப்பு,
தெய்வத்தன்மை, அழகு, ஒளி, பொலிவு,
போன்ற பல பெயர்கள் உள்ளன.

'திருக்குறள்'  என்ற தொடரில், திரு என்ற
சொல்லுக்குச் ' சிறந்த பொலிவுடைய,
ஒளியுடைய போன்ற பொருள்களைக்
கொள்ளலாம். இவ்வாறு சிறப்புகளைப்
பெற்ற நூல்கள், படைப்புகள், இடங்கள்,
' திரு' என்னும் முன்னொட்டைக் கொண்டே
அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
எ-கா: திருவருட்பா, திருக்குரான், திருவாசகம்,
திருமந்திரம், திருத்தணிகை, திருப்பதி,
திருச்செந்தூர், போன்றவை.

தமிழ் நூல்களில், திரு என்ற அடைமொழியோடு
வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
கழகக் ( சங்க) காலத்துப் பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை போன்ற தொகுப்புகளுக்குப்பின்
தோன்றிய  நூல்கள் ' பதினெண்கீழ்க்கணக்கு'
நூல்களென அழைக்கப்பட்டன. மொத்தம்
பதினெட்டு நூல்கள் இதில் அடங்கும். அவற்றுள்
திருக்குறள், நாலடியார், பழமொழி, முதலாய
பதினோரு நூல்கள் அறநூல்களாகும்.
இவற்றுள் திருக்குறளே முதல் நூல் என்க.

திருக்குறள் என்ற தொடரில் ' குறள்' என்ற
சொல் பா (பாடல், செய்யுள், யாப்பு)
வகையினால் பெற்ற பெயர் ஆகும். குறள்
என்பதற்குக் குறுமை, ஈரடி உயரமுள்ள குள்ளன்,
பூதன், சிறுமை, குறள் வெண்பா, திருக்குறள்
போன்ற பொருள்கள் உள்ளன. ஏழு சீர் உடைய
இரண்டடி வெண்பாவிற்குக் குறள் என்று பெயர்.
அதனால்தான், 'குறள்'  என்றாலே திருக்குறளைக்
குறிக்கும் சிறப்புப் பெயரைப் பெற்றுவிட்டது.

2. வெண்பா, குறள் வெண்பா - விளக்கம்;
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

பா என்பது -
ஆசிரியப்பா,
வெண்பா,
கலிப்பா,
வஞ்சிப்பா
என நான்கு வகைப்படும்.
இவையெல்லாம் செய்யுளின் வகை
என்று கொள்க.

இங்கு நாம் காணவிருப்பது நம் திருக்குறள்
அமையப்பெற்றுள்ள வெண்பா வகையை
மட்டுமே ஆகும்.
ஆம்! திருக்குறள் வெண்பா இனத்திலான
யாப்பு வகையைச் சார்ந்தது.

வெண்பாவுக்குக் குறைந்தது இரண்டடிகள்
இருக்க வேண்டும். இவ்வாறு இரண்டடிகள்
கொண்ட வெண்பாவைத்தான் குறள் வெண்பா
என்று குறிக்கின்றோம்.

இதனையல்லாமல்,
மூன்றடிகள் கொண்டு இயற்றப்படுவது
இன்னிசைச் சிந்தியல் வெண்பா அல்லது
நேரிசைச் சிந்தியல் வெண்பா என்றும்,
நான்கடிகள் கொண்ட வெண்பா -
நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா
என்றும்,
நான்கு அடிகளுக்கு மேல் பன்னிரண்டு
அடிகள் வரை பஃறொடை வெண்பா என்றும்,
பன்னிரண்டு அடிகளுக்கு மேல் உள்ளதைக்
கலிவெண்பா என்றும் கூறுவர்.

வெண்பாவுக்கான இலக்கண அமைவுகளை
ஓரளவேனும் அறிந்து கொண்டால்தான்
திருக்குறளைக் கற்பதும் எளிமையாக அமையும்.

பொதுவாக, வெண்பாவின் அடிகள் நான்கு
சீர்களைக் கொண்ட அடிகளாய் அமைதல்
வேண்டும்.இறுதி அடி மட்டும் மூன்று சீர்களைக்
கொண்டு முடியும். இங்குச் சீர்கள் என்று
குறிக்கப்பட்டுள்ளதன் பொருளை அறிந்து
கொள்வது நம் குறள் கற்றலுக்கு மிகவும்
தேவை என்பதால் அதுபற்றிய சிறு விளக்கத்தை
இனி அறிந்து கொள்வோம்.
                                                                 - தொடரும்...03

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன். .
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

No comments:

Post a Comment